search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்"

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பை தோற்கடிக்க ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்க 5 பெண்கள் வாய்ப்பு தேடுகிறார்கள். #PresidentialElection #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்படி டிரம்ப் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது.



    தற்போது வரை அக்கட்சியை சேர்ந்த 12 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் 5 பேர் பெண்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி. கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், முதல் இந்து எம்.பி.யுமான துளசி கப்பார்ட், நியூயார்க் எம்.பி. கிர்ஸ்டன் கில் பிராண்ட், மாசசூசெட்ஸ் எம்.பி. எலிசபெத் வாரன் மற்றும் மின்னசோட்டா எம்.பி. அமி குளோப்சர் ஆகிய 5 பெண்கள் களத்தில் இருக்கிறார்கள்.

    அமெரிக்க வரலாற்றில் இதுவரை பெண் ஒருவர் ஜனாதிபதி ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவி ஹலாரி கிளிண்டன் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தால் முதல் பெண் ஜனாதிபதி என்ற அந்தஸ்தை பெற்றிருப்பார். ஆனால் நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார்.

    இந்த நிலையில் ஜனநாயக கட்சியில் களத்தில் உள்ள 5 பெண்களில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டால் டிரம்ப் மீண்டும் ஒரு பெண்ணை எதிர்த்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படும்.

    டிரம்ப் பெண்களை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதால், அவருக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதாக கூறப்படுகிறது.

    எனவே டிரம்பை எதிர்த்து போட்டியிட பெண் வேட்பாளரையே ஜனநாயக கட்சி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள பெண்களை டிரம்ப் விமர்சித்து வருகிறார்.

    மாசசூசெட்ஸ் எம்.பி. எலிசபெத் வாரன் குறித்து அவர் கூறுகையில், “அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவர் என்கிற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எலிசபெத் வாரன், தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். இதை சுட்டிக்காட்டி அவர் வாக்குகளை பெற முடியாது” என்றார்.

    அதே போல் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு போட்டியிடும் மற்ற பெண்களான கிர்ஸ்டன் கில் பிராண்ட், அமி குளோப்சர், துளசி கப்பார்ட் ஆகியோரையும் டிரம்ப் விமர்சிக்க தவறவில்லை.

    அதே சமயம் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிசை சிறந்த போட்டியாளர் என டிரம்ப் கூறுகிறார்.
    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பட்டியலில் செனட் சபை பெண் எம்.பி. எலிசபெத் வாரனும் போட்டியிட போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். #PresidentialElection #DemocratElizabethWarren
    வாஷிங்டன்:

    அடுத்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் ஆவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் ஏற்கனவே தான் வேட்பாளர் போட்டியில் இருப்பதாக அறிவித்துள்ளார். இதே போன்று இந்திய வம்சாவளி இந்து எம்.பி. துளசி கப்பார்டும் வேட்பாளர் போட்டியில் களம் இறங்கி இருக்கிறார்.

    மேலும் நியூஜெர்சி எம்.பி. கோரி புக்கர், நியூயார்க் எம்.பி. கிர்ஸ்டன் கில் பிராண்ட் ஆகியோரும் வேட்பாளர் போட்டியில் இறங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் செனட் சபை பெண் எம்.பி. எலிசபெத் வாரனும் (வயது 69) வேட்பாளர் போட்டியில் தானும் இருப்பதாக மசாசூசெட்ஸ் மாகாணம், லாரன்சில் உள்ள தனது வீட்டில் வைத்து நேற்றுமுன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    அப்போது அவர், “வாஷிங்டனில் பணக்காரர்களிடம் இருந்தும், நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டுள்ளவர்களிடமும் இருந்து அதிகாரத்தை எடுத்து, அவை யாருக்கு சேர வேண்டுமோ அவர்களின் கையில் ஒப்படைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது” என குறிப்பிட்டார். #PresidentialElection #DemocratElizabethWarren 
    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளார். #USPresidential #KamalaHarris
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த செனட்சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவருக்கு வயது 54. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 4-வது பெண் கமலா ஹாரிஸ்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். #KamalaHarris #PresidentElection
    வாஷிங்டன்:

    அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானார்.

    மூத்த வக்கீலும், எழுத்தாளருமான கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினர் மற்றும் அமெரிக்க மக்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது.

    எனவே அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் இவர் டிரம்பை எதிர்த்து களம் இறங்குவார் என அமெரிக்க ஊடகங்களில் பரவலாக தகவல்கள் பரவி வருகின்றன.

    இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுப்பேன் என தற்போது கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    அமெரிக்க மக்கள் தங்களுக்கான தலைவரை சரியாக தேர்வு செய்யும் திறனை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் தலைவரை தேர்வு செய்வதற்கான கூடுதல் பொறுப்பை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

    யார் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர்? யார் தங்களை நேர்மையான முறையில் வழிநடத்துவார்? யார் தங்களின் பிரதிநிதியாக செயல்படுவார்? அதிகாரத்தில் இல்லாத போதும் யார் தங்களுக்காக குரல் கொடுப்பார்? ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் அவர்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒரு பெண்ணை ஜனாதிபதியாக ஏற்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது.

    அந்த பெண் நான் என்று கூறவில்லை. அமெரிக்க மக்களை பற்றி கூறுகிறேன். அதே சமயம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் நான் முடிவு எடுப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பேட்டியின் போது கமலா ஹாரிஸ் ஜனாதிபதி டிரம்பை விமர்சிக்கவும் தவறவில்லை. மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் டிரம்ப் குழந்தையை போல் நடந்துகொள்கிறார் என அவர் சாடினார்.

    இது பற்றி அவர் கூறுகையில், “மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் டிரம்பின் முடிவு அமெரிக்க மக்களை கடும் இன்னல்களுக்கு ஆளாக்கி இருக்கிறது.

    அதிபரின் தற்பெருமை திட்டத்துக்காக 8 லட்சம் அரசு ஊழியர்களை வேலைக்கு செல்லவிடாமல் முடக்கிவைத்திருப்பது தவறான செயலாகும்” என தெரிவித்தார்.

    மேலும் “அரசுத்துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றால் எல்லையில் சுவர் எழுப்ப தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்துவது, 11 வயதான என்னுடைய பேரன் அவனுடைய பொம்மை காரை கேட்டு அடம் பிடிப்பதை போல் உள்ளது” என கிண்டல் அடித்தார்.  #KamalaHarris #PresidentElection
    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் செனட் சபை எம்.பி., கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. #USPresidency2020 #KamalaHarris
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

    குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டிரம்ப் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே வேளையில் ஜனநாயக கட்சி சார்பில் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்ட் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளி வந்தன.



    இப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் செனட் சபை எம்.பி., என்ற பெயரைப்பெற்றுள்ள கமலா ஹாரீசுக்கு (வயது 54) அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் அங்கு கலிபோர்னியா மாகாணம் ஓக்லாந்தில் பிறந்தாலும் கூட பூர்வீகம், சென்னைதான். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர். இவர் ‘பெண் ஒபாமா’ என அமெரிக்காவில் பெயர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு மாதத்துக்கு முன்பு அவர் இயோவா மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவரது கூட்டங்களுக்கு ஒபாமாவுக்கு கூடியதுபோல கூட்டம் கூடியதாக தகவல்கள் கூறுகின்றன.

    கமலா ஹாரீஸ், ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கக்கூடும் என அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. அவற்றை அவர் ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இவர் ஒபாமாவுக்கு நெருக்கமானவர் ஆவார்.

    அமெரிக்காவில் இப்போது ஜனாதிபதி தேர்தல் நடந்து அதில் போட்டியிட்டால், டிரம்பை கமலா ஹாரீஸ் 10 பாயிண்ட் வித்தியாசத்தில் தோற்கடிப்பார் என ஆக்ஸியாஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது. #USPresidency2020 #KamalaHarris
    அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் துளசி கப்பார்ட் என்ற இந்து பெண் எம்.பி. போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #TulsiGabbard #USPresidency2020
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை.

    இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடேன், இந்திய வம்சாவளி செனட்டர் கமலா ஹாரிஸ், செனட் சபை உறுப்பினர்கள் எலிசபெத் வாரன், கிர்ஸ்டன் கில்லிபிராண்ட் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

    இந்த வரிசையில் அமெரிக்காவின் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்டின் (வயது 37) பெயரும் தற்போது இணைந்து இருக்கிறது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, அமெரிக்காவுக்கு சொந்தமான சமோயா தீவை சேர்ந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



    அப்போது துளசி கப்பார்ட், பகவத் கீதையை சாட்சியாக வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது 4-வது முறையாக கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

    ஜனநாயக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக எழுச்சி பெற்று வரும் துளசி கப்பார்ட், தற்போது நாடாளுமன்றத்தின் முக்கிய குழுக்களான ஆயுத சேவைகள் கமிட்டி மற்றும் வெளி விவகாரங்களுக்கான கமிட்டிகளில் அங்கம் வகித்து வருகிறார். இந்தியா-அமெரிக்க உறவுக்கு ஆதரவு, ஈராக் போருக்கு எதிர்ப்பு, சவுதிக்கு ஆயுதங்கள் விற்பனைக்கு எதிர்ப்பு போன்ற நடவடிக்கைகளால் ஜனநாயக கட்சியின் பலமிக்க குரலாக துளசி விளங்கி வருகிறார்.

    அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட துளசிக்கு ஆதரவு வலுத்து வருகிறது. எனவே அவர் இந்த தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 9-ந் தேதி நடந்த மாநாடு ஒன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் சம்பத் சிவாங்கி, துளசி கப்பார்டை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர், துளசி கப்பார்ட், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஆக வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

    குடியரசு கட்சியை சேர்ந்தவரும், கடந்த பல ஜனாதிபதி தேர்தல்களுக்கு அந்த கட்சி சார்பில் உயர்மட்டக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு இருந்தவருமான டாக்டர் சம்பத் சிவாங்கி, ஜனநாயக கட்சியை சேர்ந்த துளசிக்கு ஆதரவாக பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    இதைக்கேட்டதும் கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். எனினும் பின்னர் பேசிய துளசி கப்பார்ட், சம்பத் சிவாங்கியின் கருத்தை ஆதரிக்கவோ, மறுக்கவோ இல்லை. அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நன்கொடையாளர்களிடம் துளசி சார்பில் நிதி திரட்டும் வேலைகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்டுக்கு இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. அங்குள்ள முக்கியமான பல மாகாணங்களில் தேர்தல் வெற்றிக்கு இந்தியர்கள் முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.

    ஜனநாயக கட்சி சார்பில் துளசி கப்பார்ட், வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து வேட்பாளர் என்ற பெருமையை இவர் பெறுவார். இதைப்போல அவர் ஜனாதிபதியாக தேர்வானால் அமெரிக்காவின் இளமையான மற்றும் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையும் இவருக்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. #TulsiGabbard #USPresidency2020 
    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவும் தலையிட்டது என்று ஜனாதிபதி டிரம்ப் திடீரென குற்றம் சாட்டியுள்ளார். #USPresidentialElection #China #DonaldTrump
    வாஷிங்டன்:

    2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கிடையே, கடந்த மாதம் டிரம்ப் சீனா மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். அதாவது, தான் அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பதை சீனா விரும்பவில்லை என்றும், அதனால் இந்த ஆண்டுக்குள்(2018) அமெரிக்காவில் இடைத் தேர்தலை நடத்துவதற்கு சீனா முயற்சித்து வருவதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டினார். இதை உடனடியாக சீனா மறுத்தது.



    இந்த நிலையில், அமெரிக்காவின் சி.பி.எஸ். செய்திச் சேனலுக்கு ஜனாதிபதி டிரம்ப் அளித்த ஒரு மணி நேர பேட்டி நேற்று முன்தினம் இரவு ஒளிபரப்பப்பட்டது. அதில் சீனா மீது அவர் புதியதொரு குற்றச்சாட்டை கூறினார். 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், சீனாவின் தலையீடும் இருந்ததாக அப்போது பகிரங்கமாக தெரிவித்தார். சீனா மீது டிரம்ப் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைப்பது இதுவே முதல் முறையாகும்.

    அவர் கூறுகையில், “அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிட்டது. அதை விட அதிகமாக சீனாவும் இதில் தலையிட்டது என்றே நினைக்கிறேன். இதுதான் மிகப்பெரிய பிரச்சினை. இப்படி நான் சொல்வதால் ரஷியாவின் மீது கூறிய குற்றச்சாட்டில் இருந்து விலகி செல்கிறேன் என்று அர்த்தம் அல்ல. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையிட்டது. ஆனால் இதில் சீனாவின் குறுக்கீடும் இருந்தது என்றுதான் சொல்கிறேன்” என்றார்.

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததா? என்பது பற்றி முன்னாள் எப்.பி.ஐ. இயக்குனர் ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் இருந்து டிரம்பின் அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் அண்மையில் திடீரென விலகிக் கொண்டார்.

    இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு டிரம்ப் பதில் அளிக்கையில், “இது நிச்சயம் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கும் விஷயம். ஜெப் செசன்ஸ் ஏன் இந்த விசாரணையில் இருந்து விலகிக்கொண்டார் என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் நான் சரியாகவே செயல்பட்டேன் என்பதை பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

    ரஷியாவின் தலையீடு தொடர்பான விசாரணையை நீங்கள் ரத்து செய்யப்போவதாக கூறப்படுகிறதே? என்ற மற்றொரு கேள்விக்கு, “அதுபோன்ற வாக்குறுதி எதையும் நான் அளிக்கவில்லை. அதுமாதிரியான நோக்கம் எதுவும் என்னிடம் இல்லை என்பதை நிச்சயமாக கூற முடியும். ஆனால், இந்த விசாரணை மிகவும் நியாயமற்ற ஒன்றாகும். ஏனென்றால் இதில் எந்த விதத்திலும் கூட்டுச் சதி இல்லை” என்று மறுத்தார்.

    உங்களுக்கு தேர்தலில் உதவும்படி ரஷியாவை அழைத்தீர்களா? என்று கேட்டபோது, “எனக்கு தேர்தலில் உதவி செய்யும்படி ரஷியாவை அழைத்தேன் என்பதை நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?... அவர்களால் எனக்கு உதவ முடியாது என்பதுதான் உண்மை. ரஷியாவை உதவிக்கு அழைத்தேன் என்று கூறுவது மிகவும் கேலிக்குரியது” என்று டிரம்ப் பதில் அளித்தார்.
    அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டது தொடர்பான விசாரணையில் சிக்கியுள்ள டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபர் என்ற வகையில் என்னை மன்னிக்கும் அதிகாரமும் எனக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார். #Trumppardonhimself
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கிய டொனால்டு டிரம்பை வெற்றி பெறச்செய்வதற்கு ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். ரஷியாவும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒரு விசாரணை நடத்துகிறது. அதே நேரத்தில் ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழுவின் விசாரணையும் நடத்தப்படுகிறது. இந்த குழு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இந்த விசாரணை தொடர்பாக முல்லர் குழுவினருக்கும், டிரம்ப் வக்கீல்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
    டிரம்பிடம் விசாரணையின்போது கேட்பதற்காக கேள்விகள் பட்டியலும் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இதனால், அமெரிக்க ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்துள்ள டொனால்ட் டிரம்ப், பிரமாண வாக்குமூலம் அளித்து, விசாரணை குழுவினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய தர்மசங்கடமான சூழல் உருவாகி உள்ளது.

    இதற்கிடையே, ஒருவேளை ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவுடன் சேர்ந்துகொண்டு ஹிலாரியை வீழ்த்த டிரம்ப், முன்னர் திட்டமிட்டிருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் இந்த நாட்டு குடிமக்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் அதிகாரம் படைத்துள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு தனக்குத்தானே பொதுமன்னிப்ப்பு அளிக்கும் அதிகாரத்தையும் எங்கள் நாட்டு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ளது என ஆளும்கட்சியை சேர்ந்த சில வழக்கறிஞர்களும், சட்ட வல்லுனர்களும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், நாட்டின் அதிபர் என்ற வகையில் என்னை மன்னிக்கும் அதிகாரமும் எனக்கு உண்டு என டொனால்ட் டிரம்ப் இன்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த தவறுமே செய்யாத நான் எதற்காக அதை செய்ய வேண்டும்? எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    எப்படியாவது இந்த வழக்கில் தன்னை சிக்கவைக்க துடிக்கும் எதிர்க்கட்சியினரையும் அவர் விமர்சித்துள்ளார். #Trumppardonhimself
    ×